Translate

Tuesday, 8 December 2015


வடிகிறது வெள்ளம்.. முடியவில்லை கடமைகள்! ..இன்றைய தினமணியில் தோழர் தா.பாண்டியன் எழுதியுள்ள கட்டுரை


"சென்னை நகர சுத்திகரிப்புத் தொழிலாளி கொட்டும் மழையில் சாக்கடைக் குழியில் இறங்கி, அங்கிருந்த அடைப்புகளை நீக்கிவிட்டு, மூச்சுப்பிடித்து வெளியில் வந்த காட்சியை ஒரு தொலைக்காட்சியில் கண்டேன். அந்த மாமனிதரை வணங்கி எழுதுகிறேன்."
இன்றைய தினமணியில் தோழர் தா.பாண்டியன் எழுதியுள்ள கட்டுரை
First Published : 08 December 2015 01:27 AM IST  Shared by Neelkantan in Facebook
கடந்த நூறு ஆண்டுகளில் பெய்திராத பெரும் மழை, ஆந்திர மாநிலத்தில் கிழக்குக் கடற்கரையோரப் பகுதி தொடங்கி தூத்துக்குடி வரையில் குறுகிய காலத்திற்குள் அதிக அளவு மழைப் பொழிவை கொட்டித்தீர்த்து விட்டது. 2015 நவம்பர் - டிசம்பரில் பெய்யப்போகும் மழை பற்றி அக்டோபர் மாதத்தில்கூட வானிலை முன் அறிவிப்பு கிடைக்கவில்லை.
கடந்த ஏழு நாள்களாக சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், திருவள்ளூர், நாகை, திருவாரூர் மாவட்ட மக்கள் மழைக்காக ஏங்கி நின்றது போய், இருந்ததையும் இழந்து, குடிக்கத் தண்ணீர் கேட்டு கண்ணீர் விட்ட காட்சியை, வெள்ளக்காடாக மூழ்கியிருந்த நிலையில் கண்டோம்.
"Water water everywhere but, not a drop to drink'' - என்ற ஆங்கிலக் கவிதையின் வரிகளை படித்திருக்கிறோம். அது கடலில் மிதந்த ஒருவன் கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் தண்ணீரைக் கண்டாலும் அதில் தாகம் தணிக்க ஒரு சொட்டு நன்னீர் கிடைக்கவில்லையே என்று அழுத சோகத்தை வர்ணிக்கும் வரிகள். ஆனால், மூன்று கோடி மக்கள் வாழும் நிலப்பரப்பில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியபோது ஓடியது உப்பு நீர் அல்ல. சரியாகச் சொல்லப்போனால், நாம் விலைகொடுத்து வாங்க முடியாத நன்னீர்தான் ஓடியது. ஓடவிட்டதால் அது மீண்டும் உப்பு நீராகிவிட்டது.
ஆனால், பெய்த மழை அனைத்தையும் தேக்கி பயன்படுத்தியிருக்கவும் முடியாது. உபரி நீர் என திறந்து விடப்பட்ட தண்ணீரின் அளவைக் கணக்கிட்டால் அதைத் தேக்கிவைக்க பல மேட்டூர் அணைகள் தேவைப்படலாம்.
தற்போது மழையின் அச்சுறுத்தல் நீடித்தாலும் பெய்து வருவது தணிந்து, நதிகளாகத் தெரிந்த சாலைகள் மீண்டும் பயணச் சாலைகளாக தென்படத் துவங்கியுள்ளன.
கடந்த ஏழு, எட்டு நாள்களில் மக்கள் பட்டிருக்கிற அவதிகள், உயிரிழப்புகள், பொருளிழப்புகள், கால்நடை இழப்புகள், பயிரிழப்பு, குடியிருப்பு இழப்பு என நொந்து போயுள்ள இந்த நேரத்தில், அவர்கள் வெந்து குமுறி வெளியிடும் சீற்றத்தையும், விமர்சனத்தையும் புரிந்து கொள்கிற பக்குவத்தை அனைவரும் பெற்றாக வேண்டும். இந்தத் தருணத்தில், குற்றச்சாட்டுப் பட்டியல்களை தயாரிக்க முயல்வது முறையல்ல. ஏனெனில், அது எவருடைய துயர் துடைப்புக்கும் உதவாது.
அதேநேரத்தில், கற்றுத் தீர வேண்டிய பாடங்களை இப்பொழுதாவது அடக்கத்தோடு, பொறுப்போடு கற்கவும் வேண்டும்; பலதுறை வல்லுநர்களின் ஆக்கப்பூர்வ ஆலோசனைகளைக் கேட்டறியவும் வேண்டும். இது நம் அனைவருக்கும் இயற்கை தந்துள்ள தண்டனையல்ல, எச்சரிக்கை என்பதை நாம் உணர வேண்டும். ஆகவேதான், வடிந்தது வெள்ளம், தணிந்தது மழை, முடிந்தது கடமை என்ற முடிவோடு செக்கு மாடு மாதிரி பழைய பாதையிலேயே வலம்வரத் தொடங்கிவிடக் கூடாது.
இயற்கையின் சீற்றம் சற்று கடுமையாக இருந்தபோதிலும், தாங்கிக் கொள்ள முடியாத இழப்புகளை, அன்றாடம் உழைத்துச் சம்பாதித்து அதைக்கொண்டு உணவு அருந்தி வாழ்ந்த உழைக்கும் மக்கள்தான் இழப்பிலேயே பேரிழப்பைச் சந்தித்தவர்கள். நம்மில் பலர் அதைச் செய்ய வேண்டும், இதைச் செய்திருக்கலாம் என பேட்டிகளில் கூறியிருந்தாலும், நாம் கையை நீட்டி மூழ்கிக் கொண்டிருந்த ஓர் உயிரைக்கூட தூக்கிவிட்டது இல்லை.
ஆனால், சென்னை நகர சுத்திகரிப்புத் தொழிலாளி கொட்டும் மழையில் சாக்கடைக் குழியில் இறங்கி, அங்கிருந்த அடைப்புகளை நீக்கிவிட்டு, மூச்சுப்பிடித்து வெளியில் வந்த காட்சியை ஒரு தொலைக்காட்சியில் கண்டேன். அந்த மாமனிதரை வணங்கி எழுதுகிறேன்.
நாம் அசுத்தப்படுத்திய நகரத்தை சுத்தப்படுத்தும் அந்த உத்தமன்தான் நம் சமுதாயத்தில் கடைசி பொருளாதாரத் தளத்தில் காலம்காலமாக உழைத்து வருகிறான். நம்மில் யாராவது ஒரு தடவையாவது இத்தகைய கடமையை நிறைவேற்ற இயலுமா என்பதை இந்நேரத்தில் நினைத்துப் பார்க்க வேண்டுகிறேன். பெய்த பெருமழையால் கூவம் பகுதியில் தேங்கிக் கிடந்த குப்பைகளையும், சாக்கடைகளையும் கூட வெள்ளம் இழுத்துச் சென்று கூவத்தைக்கூட ஆறாக ஆக்கிவிட்டது. ஆனால், நம் சமூகத்தைப் பிடித்த பீடைகளைப் போக்க எந்த வெள்ளத்தால் முடியுமென்று சிந்திக்கவே வேண்டியிருக்கிறது.
இந்த அனுபவத்தைக் கொண்டு, முன்னுரையாக, முதலுதவிபோல சில கருத்துகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். தமிழக வெள்ள விபத்து பற்றி அண்மையில் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்குள்ளான பாரீஸில் இயற்கைச் சூழல் பாதுகாப்பிற்காக நடத்தப்பட்டுவரும் உலக மகாநாட்டில், ஆய்வு நடத்தி அறிவு பெற்றுள்ள விஞ்ஞானிகள், சென்னை வெள்ளத்தில் தத்தளிப்பதற்கு புவி மண்டலம் வெப்பமடைந்து வருவதே முக்கியக் காரணம் எனக் கூறியுள்ளதை நாம் அனைவருமே புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்.
இக்கருத்தை வெளியிட்ட அந்த விஞ்ஞானி, இந்த விபத்து இத்துடன் முடிந்தது எனக் கருத வேண்டாம்; இது மீண்டும் மீண்டும் வரலாம்; பல இடங்களிலும் நிகழலாம்; அவற்றை முன்கூட்டியே கணித்து, மக்களுக்கு எச்சரிக்கையும் தர முடியாமல்கூட போகலாம் என்று எச்சரித்திருக்கிறார்.
மழைப் பிரளயம் ஆந்திர மாநிலத்திலும் 55 பேர் உயிரை குடித்திருக்கிறது. தமிழகத்தில் கணக்கிட்டால், உயிரிழப்பு எண்ணிக்கை 500-ஐத் தொடலாம் என ஓர் அதிகாரி தெரிவித்துள்ளார். இதன் பாதிப்புக்குள்ளாகி மேலும் பலருக்கு என்ன ஆகுமோ தெரியவில்லை. பேராசான் வள்ளுவப் பெருந்தகை,
நோய்நாடி நோய்முதல்நாடி அது தணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல் } என்று கற்பித்த பாடத்தைக் கற்றோமா? அதற்குத்தக நின்றோமா? என்ற கேள்வியை நம்மை நாமே கேட்டு, தன் நெஞ்சு அறிய பொய்யின்றி ஒப்புக் கொள்வது நல்லது.
"நீரின்றி அமையாது இவ்வையம்' என்ற வள்ளுவர், வான் பொய்க்குமானால் ஈசனுக்கும் பூசை நடக்காது என்று சொன்னார். தமிழகத்தை ஆளும் பொறுப்பை ஏற்றவர்கள் நிரந்தர நீர்ப்பற்றாக்குறை உள்ள மாநிலம் என்று மாற்றிவிட செய்தது என்ன என்பதைப் பின்னர் பார்க்கலாம்.
வள்ளுவர் வழியில், கடந்த 40 ஆண்டுகளாக ஆய்விலேயே தங்கள் வாழ்வைக் கழித்த 1,000 விஞ்ஞானிகள் கையெழுத்திட்டு, "புவி மண்டலத்தில் தொடர்ந்து வெப்பம் அதிகரித்து வருவதால், உயிரினம் வாழும் நம் கோளம் பூண்டோடு அழியக்கூடிய ஒரு பேராபத்து அபாயகரமாக நெருங்கிக் கொண்டிருக்கிறது. நாம் வளர்ச்சி என்ற பெயரால் அழிவின் விளிம்பை நோக்கி முன்னேறிக் கொண்டிருப்பதாக' உலக நாட்டுத் தலைவர்கள் அனைவருக்கும் எச்சரித்தார்கள். இதை ஆண்டுதோறும் சமூக அக்கறையுள்ள விஞ்ஞானிகள் தொடர்ந்து வலியுறுத்தியும் வருகிறார்கள்.
சூரியக் கதிர்கள் பூமியில் நேரடியாகப்படவிடாமல், அதைத் தடுத்துத் தணித்து உயிரினம் காத்துவந்த விண்வெளி நீலத்திரை ஓசோன் வெடிப்புண்டு, வெந்து வருவதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதனால், வட துருவம், தென் துருவத்திலுள்ள பனிக்கட்டிப் பாறைகள் உருகி வருகின்றன. ÷இமயமலையின் உச்சியிலேயே 27% பனிக்கட்டி கரைந்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், பருவகால மாற்றங்களும், அதன் எதிர்பாரா விளைவுகளும் மனித குல அழிவிற்கு இட்டுச் செல்லலாம் என எச்சரித்துள்ளனர்.
எனவே, இது நம் காலில் தைத்த முள் மட்டுமல்ல, நம் தலைக்கு மேல் கொட்டும் மழை நீரும் அல்ல. ஆகவே, நம்மைத் தற்காத்துக் கொள்ள நாம் செய்ய வேண்டிய கடமைகளை முன்னுரிமை கொடுத்து வகுத்துக் கொள்ளலாம். அதில், அரசியல் கட்சிகளின் அபார ஆலோசனைகளைவிட விஞ்ஞான தொழில்நுட்ப வல்லுநர்களின் முழு ஒத்துழைப்பை, வழிகாட்டுதல்களை நாட வேண்டும். அத்துடன், புவி மண்டல வெப்பம் என்பதால், அது குறித்து தெரிந்துகொள்ளவும், அதற்கான நமது கடமையையும் செய்ய வேண்டும்.
புவி மண்டல வெப்பத்தைப் பற்றி முதன்முதலாக, மிக அழுத்தமாக 40 ஆண்டுகளுக்கு முன்பே எச்சரித்தவர் கியூபா நாட்டை விடுவித்த புரட்சியாளர் தோழர் பிடல் காஸ்ட்ரோ தான். 40 ஆண்டுகளுக்கு முன்பு அவர் உலகக் கம்யூனிஸ்டுகளுக்கு இதனை தங்கள் முழு முதற்கடமையாக ஏற்கும்படி வலியுறுத்தினார்.
மனிதர்களை மட்டுமல்ல, உயிரினம் அனைத்தையுமே காப்பாற்ற வேண்டிய ஒரு பெரும் வரலாற்றுக் கடமை கம்யூனிஸ்டுகள் மீது சுமத்தப்பட்டிருப்பதால் வர்க்கப் பார்வை, வர்க்கப் போராட்டம் என்று மட்டும் பேசிக் கொண்டிருக்காதீர்கள் என்றும் எச்சரித்தார். நாங்களும் இக்கடமையில் தவறியிருக்கிறோம் என்றே கருதுகிறேன்.
உலக நாட்டுத் தலைவர்கள் கூடும் போதெல்லாம், யார் அதிகமாக புகைவிட்டது? யார் அதிகமாக ரசாயனக் கழிவை வெளியிட்டது? எனவே அதைக் குறைக்க என்ன வழி? எவ்வளவு ரூபாய் என்று சர்ச்சை செய்துவிட்டு முடிவெடுக்க முடியாமல், முடிவை நோக்கி போய்க் கொண்டிருக்கிறோம்.
எனவே, இனி காலம் தாழ்த்த இயற்கை இடம் தராது. உடனடி நிவாரணப் பணிகளோடு, விவசாயிகள் மறு உற்பத்தியைத் தொடங்கத் தேவைப்படும் முழு நிதி உதவியையும் மண் உலர்வதற்குள் கொடுத்தாக வேண்டும்.
காணாமல் போய்விட்ட ஏரி, குளங்களைத் தேட வேண்டும். நீர் வரத்துக் கால்வாய்களைக் கண்டறிய வேண்டும். தொழில் வளர்ச்சி என்ற பெயரால், குறிப்பிட்ட நிலப்பரப்புக்குள், குறிப்பாக சென்னையில் - அதைச் சுற்றி தொழிற்சாலைகள் கட்ட அனுமதி வழங்கக் கூடாது. தென் தமிழகத்தில் கட்டச் சொல்ல வேண்டும். இல்லையேல், போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்ற முடிவுக்கு வர வேண்டும்.
உடனடியாகக் கண்ணீரைத் துடைப்போம். இந்தச் சோதனையையே ஒரு வாய்ப்பாக மாற்றி, புதிய தமிழகத்தை வாழத்தக்க இடமாக மாற்றியமைக்க முயல்வோம். இக்கடமையில் தவறினால், வருங்கால சந்ததி நம்மைச் சபிக்கும்.
உடனடி நிவாரணப் பணிகளோடு, விவசாயிகள் மறு உற்பத்தியைத் தொடங்கத் தேவைப்படும் முழு நிதி உதவியையும் மண் உலர்வதற்குள் கொடுத்தாக வேண்டும். காணாமல் போய்விட்ட ஏரி, குளங்களைத் தேட வேண்டும். நீர் வரத்துக் கால்வாய்களைக் கண்டறிய வேண்டும்.

No comments:

Post a Comment